சீன கார் தயாரிப்பு நிறுவனங்கள் சுவிட்சர்லாந்து சந்தையில் பாரிய ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன.

குறைந்த விலை வியூகம், விரிவடைந்து வரும் வாகன வகைகள் மற்றும் மேம்பட்ட தரம் ஆகியவற்றின் மூலம் இவ்வாறு கூடுதல் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

 இதனால் ஐரோப்பிய மற்றும் பாரம்பரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

நடப்பாண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் சுவிட்சர்லாந்தில் 5,400-க்கும் மேற்பட்ட பி.ஒய்.டி (BYD) கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் வெறும் 700 கார்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இது பாரிய வளர்ச்சியாகும்.

இதன் மூலம் கியா (Kia – 5,100) மற்றும் ஃபோர்ட் (Ford – 3,900) ஆகிய பிரபல நிறுவனங்களை BYD பின்னுக்குத் தள்ளியுள்ளது.

இதேபோல், லீப்மோட்டர் நிறுவனத்தின் விற்பனை 600-லிருந்து 2,000 ஆகவும், சீக்கர் (Zeekr) நிறுவனத்தின் விற்பனை 44-லிருந்து 1,200 ஆகவும் உயர்ந்துள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கமான ‘ஒட்டோ-சுவிட்சர்லாந்து’ (Auto-Switzerland) தகவலின்படி, தற்போது சுவிட்சர்லாந்து வாகனச் சந்தையில் சீன நிறுவனங்கள் சுமார் 7% பங்கைக் கொண்டுள்ளன.

2025 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து வீதிகளில் சீன கார்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக ‘ஒட்டோ-சுவிட்சர்லாந்து’ இயக்குனர் தாமஸ் ரூக்கர் (Thomas Rücker) தெரிவித்துள்ளார்.

லீப்மோட்டர் மற்றும் ஜே.ஏ.சி (JAC) ஆகிய நிறுவனங்கள் 17,000 சுவிஸ் பிராங்குகளுக்கும் குறைவான விலையில் சிறிய ரக மின்சார கார்களை (Electric cars) வழங்குகின்றன.

மறுபுறம், சீக்கர் போன்ற நிறுவனங்கள் உயர்தர சொகுசு வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

வெறும் குறைந்த விலையை மட்டும் பார்க்காமல், இறக்குமதியாளரின் உறுதித்தன்மை, உள்ளூர் சேவை மையங்களின் வசதி மற்றும் விற்பனைக்குப் பிந்தைய உத்தரவாதம் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே வாடிக்கையாளர்கள் கார்களைக் கொள்வனவு செய்ய வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.