சுவிஸ், இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது டிரம்ப் மீண்டும் வரி விதிப்பு!

நியாயமற்ற தொழில்துறை நடைமுறைகள் மற்றும் அதீத உற்பத்தித் திறன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் 301-ஆவது பிரிவின் கீழ், எட்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வணிகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க மானியங்கள் வழங்கப்படுவதையும், அதீத உற்பத்தி மூலம் உலகச் சந்தையில் மலிவு விலை பொருட்கள் குவிக்கப்படுவதையும் கட்டுப்படுத்துவதே இந்த வரி விதிப்பின் நோக்கம் என வொஷிங்டன் தெரிவித்துள்ளது.
- சுவிட்சர்லாந்து
- இந்தியா
- சீனா
- ஐரோப்பிய ஒன்றியம் (EU)
- ஜப்பான்
- தென் கொரியா
- தாய்வான்
- வியட்நாம்
- தாய்லாந்து
- மலேசியா
- சிங்கப்பூர்
- இந்தோனேசியா
- பங்களாதேஷ்
- கம்போடியா
இந்தப் புதிய வரி விதிப்புப் பட்டியலில் இலங்கையின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மெக்சிகோ மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கும் தற்போதைக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடுகள் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கு ஏற்ப வரி விகிதங்கள் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீனாவுக்கு அதிகபட்சமாக 20% கூடுதல் வரி முன்மொழியப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள வரிகளுடன் இவை இணையும்போது, சில சீனப் பொருட்கள் மீதான மொத்த வரி 40% அல்லது அதற்கு மேல் உயரக்கூடும் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய வரிகள் பொதுமக்கள் மற்றும் வர்த்தகத் தரப்பினரின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2027 ஜனவரி மாதத்தில் இவை நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வர்த்தகப் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்த வரி விதிப்பு சர்வதேச வணிகங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.