புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பலர் மாயம்!

மேற்கு ஆபிரிக்க நாடான செனகல் கடற்பரப்பில் சுமார் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டசின் கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தலைநகர் டக்காரிற்கு தெற்கே உள்ள யென்னே நகரத்திற்கு அருகில் பலத்த சேதமடைந்த நிலையில் கரையொதுங்கிய படகிலிருந்து பயணிகளின் தனிப்பட்ட உடைமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பகட்ட தகவல்களில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட போதிலும், குறைந்தது நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதன்கிழமை முழுவதும் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் பணிகள், வியாழக்கிழமையும் தொடர்கின்றன.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கிராமத் தலைவரின் பிரதிநிதியான உமர் சோவ் தெரிவித்துள்ளார். கடலில் தத்தளித்த மரப் படகிலிருந்து கேட்ட அவலக் குரல்கள் கடற்கரை வரை கேட்டதாக அவர் ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
உயிர் தப்பிய ஒருவர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், படகில் சுமார் 100 பேர் பயணித்ததாகத் தெரிவித்துள்ளார். சேதமடைந்த படகின் பாகங்களிலிருந்து அடையாள ஆவணங்கள், பல அலைபேசிகள் மற்றும் உயர்தரப் பாடசாலை மாணவர் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படும் பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
செனகலின் வடமேற்கு நகரமான தியெப்பே கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்து இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவுக்குச் செல்லும் நோக்கில் சட்டவிரோதமாகக் கடல் வழியாகப் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது குறித்து செனகல் ஜனாதிபதி தியோமாயே ஃபாயே , புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கவலை வெளியிட்டுள்ளார். ஆபத்தான கடல் பயணங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மோதல்கள், சர்வாதிகார ஆட்சி மற்றும் வறுமையிலிருந்து தப்பிச் செல்ல முயலும் ஆயிரக்கணக்கான மேற்கு ஆபிரிக்க மக்கள் கடலில் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் மேற்கு ஆபிரிக்க கடற்கரையோர அத்திலாந்திக் வழித்தடத்தில் குறைந்தது 454 பேர் உயிரிழந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வு முகவரகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.