ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஆக்கப்பூர்வமான முறையில் ஒத்துழைத்தால், உலகளாவிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் முத்தரப்பு உச்சிமாநாட்டில் தொடக்கவுரையாற்றிய போதே புட்டின் இதனைக் குறிப்பிட்டார்.

தாமும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும், குறிப்பாக எரிசக்திப் பாதுகாப்பு தொடர்பாகவும் கலந்தாலோசிக்க வேண்டும் என புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்முயற்சியின் பேரில் முன்னதாக இருவரும் நடத்திய சந்திப்பில், உக்ரைன் போர் விவகாரம் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டதாகவும் புட்டின் குறிப்பிட்டுள்ளதாக மாஸ்கோவின் அரச செய்தி நிறுவனமான ‘டாஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

தமது தொடக்கவுரையில் மேலும் கருத்துத் தெரிவித்த புட்டின், “இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடுகள் என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், சர்வதேச அமைதியைப் பேணுவதற்கான பொறுப்பிலும் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்துள்ளன“ எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.