உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவ் வரைந்த “Châtaigniers en fleurs” (பூத்துக்குலுங்கும் செஸ்ட்நட் மரங்கள்) எனும் ஓவியம், நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 190.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிப் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

பிரபல ஏல நிறுவனமான ‘சோத்பீஸ்’ புதன்கிழமை நடத்திய ஏலத்தில் இந்த ஓவியம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2022 ஆம் ஆண்டில் வான் கோவின் ஓவியமொன்று 117.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையானதே இதுவரையிலான அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில், இப்புதிய விற்பனை அச்சாதனையை முறியடித்துள்ளது.

190.4 மில்லியன் டொலருக்கு விற்பனையான வான் கோவின் ஓவியம்.

1890 ஆம் ஆண்டில், வின்சென்ட் வான் கோவ் உயிரிழப்பதற்கு இறுதி இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இந்த எண்ணெய் வண்ண ஓவியம் வரையப்பட்டது.

அக்காலப்பகுதியில் அவரால் வரையப்பட்டு, தனிநபர்களின் கைகளில் இருந்த மிக முக்கியமான கலைப்படைப்புகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சுமார் 180 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டிருந்த இந்த ஓவியத்தை யார் கொள்வனவு செய்தார் என்ற விபரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, ஜேர்மனியில் நாஜிக்களின் எழுச்சியின் போது ஏற்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே இந்த ஓவியம் கட்டாயத்தின் பேரில் விற்கப்பட்டதாகக் கூறி சர்ச்சை எழுந்திருந்தது.

1909 ஆம் ஆண்டில் பிரபல ஜேர்மன் பதிப்பாளர் சாமுவேல் பிஷர் இந்த ஓவியத்தை வாங்கியிருந்தார். 1934 இல் அவரது மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தினருக்கு இது கைமாறியது.

நாஜிக்களின் ஆட்சியின் போது பிஷர் குடும்பத்தின் பதிப்பக நிறுவனம் பாரிய நிதி இழப்புகளைச் சந்தித்ததால், இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஆம்ஸ்டர்டாமில் இந்த ஓவியம் விற்கப்பட்டதாக அக்குடும்பத்தின் வாரிசுகள் தரப்பில் வாதிடப்பட்டது.

1975 ஆம் ஆண்டு முதல் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ‘பிளாகியர்-அரியெட்டா’ குடும்பத்தினரிடம் இந்த ஓவியம் இருந்து வந்தது.

இந்நிலையில், ஏலம் தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாக, பிளாகியர்-அரியெட்டா குடும்பத்தினருக்கும் பிஷர் குடும்பத்தின் வாரிசுகளுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டதாக சோத்பீஸ் நிறுவனம் அறிவித்தது. ஹோலோகோஸ்ட் காலத்தில் பிஷர் குடும்பம் அனுபவித்த துயரங்களையும், ஓவியத்தின் வரலாற்றுப் பின்னணியையும் கருத்தில்கொண்டு இரு குடும்பங்களும் இணக்கப்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்தே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.