சுவிஸில் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 800 கஞ்சா செடிகள் மீட்பு:

சுவிட்சர்லாந்தின் கிராபுன்டன் கான்டனில் உள்ள ரெசூன்ஸ் பகுதியில், வீட்டிற்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த சுமார் 800 கஞ்சா செடிகளை அந்நாட்டு அதிகாரிகள் அதிரடிச் சோதனை மூலம் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சட்டவிரோத கஞ்சா தோட்டத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படும் 32 வயதான ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
கிராபுன்டன் மாகாண பொலிஸார் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வாளர்கள் மற்றும் மாகாண அரச சட்டத்தரணி அலுவலக அதிகாரிகள் இணைந்து நவம்பர் மாத நடுப்பகுதியில் முன்னெடுத்த விசாரணையின் போதே இச்சட்டவிரோத செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர், தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள்ளும் அதன் நிலவறையிலும் இந்தக் கஞ்சா வளர்ப்புக் கூடத்தை அமைத்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளை அழிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதுடன், சுவிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஜேர்மன் பிரஜைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.