சுவிஸ் ராஜதந்திரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட நாடு!

வடகொரியாவிலுள்ள சுவிட்சர்லாந்து ராஜதந்திர அலுவலகத்தின் பிரதானியை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வடகொரிய வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் வோன்சான் நகருக்கு அருகிலுள்ள ‘சோங்டோவோன் சர்வதேச சிறுவர் முகாம்’ மீது சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடைகளை விதித்தமைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் இச்செயல் ஒரு “பகைமை உணர்வு கொண்ட நடவடிக்கை” என வடகொரியா சாடியுள்ளது.
வடகொரிய வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய விவகாரப் பணிப்பாளர் நாயகம் பக் ஹியோன்-சு, சுவிஸ் ராஜதந்திர அலுவலகத் தலைவர் சில்வைன் அஸ்டியரை நேரில் அழைத்து, அவரை விரும்பத்தகாத நபராக அறிவித்ததுடன், அலுவலகத்தை மூடுமாறு கோரும் குறிப்பாணையையும் கையளித்துள்ளார்.
உக்ரைன் சிறுவர்களுக்கு ரஷ்யாவின் சித்தாந்தங்களைப் போதிப்பதற்கு இந்தச் சிறுவர் முகாம் உதவுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவைப் போலவே சுவிட்சர்லாந்தும் குறித்த முகாமின் வெளிநாட்டுச் சொத்துக்களை முடக்கியதுடன், அதன் தலைவர்கள் சுவிட்சர்லாந்துக்குப் பயணிக்கவும் தடை விதித்திருந்தது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் செல்வாக்கு மிக்க சகோதரியான கிம் யோ ஜோங், இந்தத் தடைகள் காரணமாகச் சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூட நேரிடும் என எச்சரித்திருந்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020 ஆம் ஆண்டு மூடப்பட்டிருந்த வடகொரியாவிலுள்ள சுவிஸ் ஒத்துழைப்பு அலுவலகம், கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதியே மீண்டும் திறக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியிருந்தது.
பேய்ஜிங்கில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த அலுவலகம், மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக பேய்ஜிங்கில் உள்ள தமது தூதரகத்திற்கோ அல்லது பியோங்யாங்கில் உள்ள அலுவலகத்திற்கோ வடகொரியாவிடமிருந்து உத்தியோகபூர்வமாக எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை எனச் சுவிட்சர்லாந்து வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்திருந்தது.