வாகன விபத்துக்களில் உயிர்ச் சேதங்களைத் தடுக்க ஆச்சரியமான கண்டுபிடிப்பு:

வாகன விபத்துக்களின் போது ஏற்படும் பாரிய அதிர்ச்சிகளை உள்வாங்கி, பயணிகளின் உயிரைப் பாதுகாக்கக்கூடிய புதிய வகை ‘கலப்பு உலோக நுரை’ (Composite Metal Foam – CMF) தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது வாகனத்தின் எடையை அதிகரிக்காமலேயே, விபத்துக்களின் போது ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பெருமளவில் குறைக்கும் எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் மற்றும் விண்வெளிப் பொறியியல் பேராசிரியர் அப்சானே ரபீய் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட கணினி மாதிரி ஆய்வுகளில் இந்த வியக்கத்தக்கத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இராணுவக் கவச வாகனங்கள் மற்றும் குண்டு துளைக்காத அங்கிகளுக்காக ஆய்வு செய்யப்பட்டு வந்த இந்த CMF பொருளில், உலோகக் கலவைக்குள் நுண்ணிய உள்ளீடற்ற உலோகக் கோளங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
நேருக்கு நேர் மோதும் விபத்துக்களின் போது, வாகனத்தின் முன்பக்கச் சட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வளைந்து மோதல் சக்தியை உள்வாங்க வேண்டும்.
வாகனம் மிக வேகமாகவும் திடீரெனவும் நிற்பதே பயணிகளுக்குப் பலத்த தலைக் காயங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.
இந்தப் புதிய உலோக நுரை, மோதல் சக்தியை மிகச் சிறப்பாக உள்வாங்கி, வாகனம் திடீரென நிற்பதைத் தாமதப்படுத்துகிறது.

மணிக்கு 55 மைல் (சுமார் 88 கி.மீ) வேகத்தில் நிகழும் விபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், வழக்கமான வாகனச் சட்டங்களை விட CMF சட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன.
வழக்கமான செவ்வக வடிவ எஃகுச் சட்டங்களுடன் ஒப்பிடும்போது, CMF சட்டங்கள் விபத்தின் தீவிரத்தை 94% வரை குறைப்பதுடன், கடுமையான தலைக் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பை 83% வரை குறைக்கின்றன.
நவீன வாகனங்களில் பயன்படுத்தப்படும் இரட்டை எண்கோண அலுமினியச் சட்டங்களை விட, CMF சட்டங்கள் விபத்தின் தீவிரத்தை 45% குறைத்துள்ளன. மேலும், வாகனங்கள் 34% முதல் 40% வரை அதிக வேகத்தில் சென்றாலும் ஆபத்தான எல்லையை எட்டாமல் பாதுகாக்கும் திறன் இதற்கு உள்ளது.
இந்தப் புதிய பாதுகாப்பு அமைப்பைப் பொருத்துவதால் வாகனத்தின் எடையோ அல்லது நீளமோ அதிகரிக்காது என்பதால், எரிபொருள் சிக்கனத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
மாறாக, வாகனத்தின் முன்பகுதியின் நீளத்தைக் குறைத்து மேலும் எரிபொருள் சிக்கனத்தைப் பெற முடியும் எனப் பேராசிரியர் ரபீய் குறிப்பிடுகிறார்.
மேலும், இந்த உலோக நுரை அதிக வெப்பம் மற்றும் தீயைத் தாங்கும் திறன் கொண்டது என்பதால், மின்சார வாகனங்களின் (EV) பேட்டரிகளை விபத்துக்களின் போதும் தீ விபத்துக்களின் போதும் பாதுகாக்கவும் இதைப் பயன்படுத்த முடியும்.
அடுத்தகட்டமாக, வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து நேரடி மோதல் சோதனைகளை (நடத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.