இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கு வரியை உயர்த்தும் சுவிஸ் அரசாங்கம்!

பாரம்பரிய சிகரெட்டுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் ‘புகையிலைத் தடுப்பு வரியை’ ,இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கும் விரிவுபடுத்த சுவிட்சர்லாந்து கூட்டாட்சி சபை பரிந்துரைத்துள்ளது.
இதன் மூலம் இலத்திரனியல் சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் சிகரெட்டுகளுக்குக் புகையிலை வரி விதிக்கப்பட்டு வருகின்ற போதிலும், ‘புகையிலைத் தடுப்பு நிதியத்திற்கான’ விசேட வரி அவற்றிற்கு அறவிடப்படவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையொன்றின் ஊடாக இப்புதிய தயாரிப்புகளுக்கும் தடுப்பு வரியை நீடிக்கக் கூட்டாட்சி சபை பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், “பாரம்பரிய சிகரெட்டுகளுக்குப் பதிலாக நிக்கோடின் அடங்கிய புதிய தயாரிப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாலும், அவற்றிற்குத் தடுப்பு வரி அறவிடப்படாததாலும் புகையிலைத் தடுப்பு நிதியத்திற்கான நிதி ஆதாரங்கள் குறைந்து வருகின்றன“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலத்திரனியல் சிகரெட்டுகளும் பாரிய சுகாதார அபாயங்களை ஏற்படுத்துவதாகவும், குறிப்பாக இளைஞர்களை இலக்கு வைத்தே இவை சந்தைப்படுத்தப்படுவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ‘புகையிலை வரிச் சட்டத் திருத்தத்தின்’ ஒரு பகுதியாக இந்த புதிய வரி விதிப்பை நடைமுறைப்படுத்த கூட்டாட்சி சபை முன்மொழிந்துள்ளது.
எனினும், இது நடைமுறைக்கு வரும் குறிப்பிட்ட திகதி எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. போதைப் பழக்கத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள தொடர் பரிந்துரைகளின் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.