சுவிஸில், கட்டார் மன்னருக்கு இராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாகச் சுவிட்சர்லாந்து சென்றுள்ள கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை, சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலின் புதன்கிழமை இராணுவ மரியாதையுடன் வரவேற்றார்.
தலைநகர் பேர்னில் உள்ள ‘புன்டெஸ்ப்ளாட்ஸ்’ சதுக்கத்தில் இரு தலைவர்களும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து ‘பெர்னர்ஹோஃப்’ மாளிகையில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளில், சுவிஸ் கூட்டாட்சி சபையின் மேலும் மூன்று அமைச்சர்களான எரிசக்தி அமைச்சர் ஆல்பர்ட் ரோஸ்டி, வெளிவிவகார அமைச்சர் இக்னாசியோ காசிஸ் மற்றும் நிதி அமைச்சர் கரின் கெல்லர்-சுட்டர் ஆகியோரும் பங்கேற்றனர்.
பொருளாதாரம், நிதி மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இப்பயணத்தின் பிரதான நோக்கமாகும் எனச் சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வளைகுடாப் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பான விடயங்கள் குறித்தும் இப்பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது.
சுவிட்சர்லாந்து உள்ளடங்கலான ஐரோப்பிய சுதந்திர வர்த்தகச் சங்க நாடுகள், 2014 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.
அதனைத் தொடர்ந்து, கட்டார் சுவிட்சர்லாந்தில் பாரிய நேரடி முதலீடுகளைச் செய்துள்ளதுடன், இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவும் விளங்குவதாகச் சுவிஸ் பொருளாதார விவகாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அரசமுறைப் பயணத்தின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை, சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலின் மற்றும் கட்டார் மன்னர் ஆகியோர் இரு நாட்டு வர்த்தகப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.