ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்தை வீதிப் போக்குவரத்திலிருந்து ரயில் போக்குவரத்திற்கு மாற்றும் திட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கில், அதற்கான மானியங்களை 2035 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான முன்மொழிவைச் சுவிட்சர்லாந்து கூட்டாட்சி சபை புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஊடான சரக்குப் போக்குவரத்தில் ரயில் சேவையின் பங்கு 68.6% ஆகப் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து நான்காவது ஆண்டாக ரயில் போக்குவரத்து தனது சந்தைப் பங்கை வீதிப் போக்குவரத்திடம் இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஊடான ரயில் சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் பாராளுமன்றத்தின் கோரிக்கைக்கு அமைய, ‘சாரதியற்ற ஒருங்கிணைந்த போக்குவரத்துக்கான’ செயற்பாட்டு மானியங்களை 2035 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்னதாக இந்த மானியத் திட்டம் 2030 ஆம் ஆண்டுடன் நிறைவடையவிருந்தது.

இத்திட்டத்தை அடுத்த ஆண்டு முதலே விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வர விரும்புவதாகக் கூட்டாட்சி சபை தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2027 முதல் 2030 வரையான காலப்பகுதியில், அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் 59 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை இத்திட்டத்திற்கு வழங்கவுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மானியத் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும்.

2035 ஆம் ஆண்டு வரை கூட்டாட்சி அரசாங்கம் இதற்காக மொத்தம் 486 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.