ருவாண்டாவில் புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தல் மையத்தை அமைக்க 5 ஐரோப்பிய நாடுகள் திட்டம்!

முறையற்ற குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் நாடு கடத்தல்களை விரைவுபடுத்தும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஆபிரிக்க நாடான ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் (Kigali) புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் மையம் (Return hub) ஒன்றை அமைப்பதற்கு ஐந்து ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள் திட்டமிட்டுள்ளன.
ஜேர்மனி, டென்மார்க், ஆஸ்திரியா, கிரேக்கம் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இது குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இத்தகைய மையங்களை உருவாக்க அனுமதிக்கும் வகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றியச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
பிரித்தானியத் திட்டத்திலிருந்து வேறுபட்ட நடைமுறை:
கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரித்தானியாவால் முன்மொழியப்பட்டு, சட்டச் சிக்கல்கள் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் 2024 இல் புதிய தொழிற்கட்சி அரசாங்கத்தால் கைவிடப்பட்ட திட்டத்திலிருந்து இது வேறுபட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியத் திட்டம் புகலிடக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்காக மக்களை ருவாண்டாவிற்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தப் புதிய திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கியிருப்பதற்கான அனைத்துச் சட்டப்பூர்வ வாய்ப்புகளையும் இழந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதம், பல ஐரோப்பிய நாடுகளுடன் இது தொடர்பான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதை ருவாண்டா உறுதிப்படுத்தியிருந்தது.
2027 இல் செயற்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு:
ஆரம்பத்தில் ஒரு முன்னோடித் திட்டமாக (Pilot project) ஆரம்பிக்கப்படவுள்ள இந்த மையத்தில் சுமார் 100 பேர் தங்கவைக்கப்படுவார்கள் எனவும், ஐந்து நாடுகளும் தலா 20 புலம்பெயர்ந்தோரை அங்கு அனுப்பக்கூடும் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் ஏ.எஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன. 2027 ஆம் ஆண்டளவில் இந்த மையம் செயற்பாட்டிற்கு வரும் என அந்நாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
இத்திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) துணைப் பங்காற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “சிக்கலான சூழல்களில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதில் தமக்கு நீண்ட வரலாறு உள்ளது” எனத் தெரிவித்துள்ள அவ்வமைப்பின் பேச்சாளர், இத்தகைய மையங்களை அமைப்பது குறித்து சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு:
இதேவேளை, இந்தத் திட்டத்திற்காக ருவாண்டா தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) கடும் கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவ்வமைப்பின் மூத்த ஆபிரிக்க ஆய்வாளர் கிளெமென்டைன் டி மொன்ட்ஜோய் கூறுகையில், “மாற்றுக் கருத்துக்களை ஒடுக்குதல், தன்னிச்சையான தடுப்புக்காவல், தடுப்புக்காவலில் மோசமாக நடத்துதல் மற்றும் அண்டை நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ஆயுதக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் ருவாண்டா மோசமான வரலாற்றைக் கொண்டுள்ளது. நாடு கடத்தல் திட்டத்தை நடத்துவதற்காக கிகாலிக்குப் பணம் செலுத்துவது, நாடு கடத்தப்படுபவர்களுக்குத் துன்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான ஒரு அரசாங்கத்திற்கு நிதியளித்து அரசியல் பலத்தை வழங்குவதாகவும் அமையும்” என எச்சரித்துள்ளார்.