சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 19) பிற்பகல் நடைபெறவுள்ள அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பிற்கு முன்னதாக, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசிய போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

 ஜின்பிங்கிடம் உரையாற்றிய ட்ரம்ப், “ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் விவகாரத்தில் நாங்கள் இருவரும் இணைந்து உதவ எதிர்பார்க்கிறோம். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே எமது விருப்பம்“ எனக் குறிப்பிட்டார். இம்மோதலில் ஒவ்வொரு மாதமும் பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட சுமார் 25,000 பேர் கொல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிற்பகல் நடைபெறவுள்ள முத்தரப்புச் சந்திப்புக்கு முன்னோட்டமாகத் தான் ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி புட்டினைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும், இந்த முத்தரப்புச் சந்திப்பு வெற்றிகரமாக அமையும் எனத் தான் நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதேவேளை, சீன ஜனாதிபதியை “எனது நண்பர்” என அழைத்த ட்ரம்ப், அவருடன் தனக்கு மிகச் சிறப்பான உறவு இருப்பதாகக் கூறினார். “நீங்களும் நானும் பொறுப்பில் இருக்கும் வரை எமக்குள் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது“ என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்வதிலும், ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரிப்பதைத் தடுப்பதிலும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் உள்ளது என்பதை இருவரும் மிகவும் உறுதியாக உணர்ந்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இவற்றைத் தவிர, அமெரிக்காவில் நிலவும் ‘ஃபென்டானில்’ போதைப்பொருள் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட பல துறைகளில் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பிலிருந்து ஏதேனும் உருப்படியான முடிவுகள் எட்டப்படுமா எனப் பலரும் சந்தேகம் வெளியிட்ட நிலையில், நிச்சயமாக ஒரு நல்ல தீர்வு எட்டப்படும் எனத் தான் மிக உறுதியாக நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.