டக்ளஸின் முன்னாள் சகாக்களுக்கு எட்டுப் பேருக்கு மரண தண்டனை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
இந்த வழக்கில் மொத்தமாக ஒன்பது பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதில் ஒன்பதாவது பிரதிவாதி குற்றமற்றவர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி, ஈ.பி.டி.பி. குழுவைச் சேர்ந்த சிலர் அக்கட்சியின் செங்கலடி முகாமில் வைத்து தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை வேன் ஒன்றில் கடத்திச் சென்று படுகொலை செய்து, அவரது சடலத்தை மண்ணில் புதைத்துள்ளனர்.
பின்னர் சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் வாழைக் கன்றுகள் நடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களைக் கைது செய்திருந்தனர்.
முன்னதாக இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து, இன்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்:
- தர்மலிங்கம் இளமாறன்
- வீரகுட்டி சேகர்
- மகேந்திரராஜா வினோராஜ்
- யோகராசா ஜெயக்குமார்
- ஸ்ரீஸ்கந்தராஜா நாகநாதன்
- சொக்கலிங்கம் நாகராசா
- அருணாச்சலம் ராமச்சந்திரன்
- கோவிந்தன் பிரதீப்
ஆகிய எட்டுப் பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.