தேனின் ஆச்சரியமிக்க மருத்துவ நலன்:

காயங்களை ஆற்றும் மருத்துவ குணத்திற்கு அப்பால், பல மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன், சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களுக்கு எதிராக மனித சரும செல்களின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடும் எனப் புதிய ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் சருமம் முதுமையடைவதை விரைவுபடுத்துவதுடன், சரும செல்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, சருமப் புற்றுநோய்க்கு முன்னோடியாக அமையும் பாதிப்புகளையும் உருவாக்கக்கூடும்.
இதிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் வழிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் நிலையில், இத்தாலியின் சசாரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பல மலர் தேனின் தாக்கம் குறித்து முக்கிய ஆய்வொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பேராசிரியர் மார்கெரிட்டா மயோலி தலைமையிலான ஆய்வுக் குழுவின் உறுப்பினர் வைத்தியர் பிகியே புல்யா கவாக் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக, மனித சருமத்தின் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட உயிரி உலை ஒன்றில், மனித சரும மூலச்செல்கள், ஃபைப்ரோபிளாஸ்ட்கள் மற்றும் கெரடினோசைட்டுகள் ஆகியவை வளர்க்கப்பட்டன.
இவற்றில் சில செல் மாதிரிகளுக்கு புற ஊதாக் கதிர்கள் பாய்ச்சப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக 1% பல மலர் தேன் செலுத்தப்பட்டது. மற்றவை தேன் செலுத்தப்படாமல் சாதாரண நிலையில் வைக்கப்பட்டன.
புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திற்குப் பின்னர் இரு மாதிரிகளும் ஒப்பிடப்பட்டதில் பல ஆச்சரியமான தகவல்கள் வெளியாகின:
தேன் செலுத்தப்பட்ட சரும மூலச்செல்களில், செல்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக்கொள்ளும் திறன் அதிகரித்திருந்ததுடன், முதுமையுடன் தொடர்புடைய மரபணுக்களின் செயல்பாடு குறைந்திருந்தது.
தேன் கலக்கப்பட்ட செல்கள் குறைந்தளவு நைட்ரிக் ஒக்சைடை வெளியிட்டதுடன், அதிக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புத் திறனையும் வெளிப்படுத்தின.
இது புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் செல்களின் பாதுகாப்பு அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
புற ஊதாக் கதிர்களின் பாதிப்புக்குப் பின்னர், செல்களை அதீத பழுதுபார்க்கும் நிலைக்குத் தள்ளாமல், இயற்கையான பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரித்துச் செல்களை ஆரோக்கியமான சமநிலையில் வைத்திருக்கத் தேன் உதவியுள்ளதாக வைத்தியர் கவாக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவுகள் சருமப் பாதுகாப்பில் தேனின் பங்கு குறித்த ஆரம்பகட்ட நம்பிக்கையை அளித்தாலும், மனிதர்களின் சருமத்தில் நேரடியாக இத்தகைய விளைவுகள் ஏற்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.