சீனிக்குப் பதிலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவது பசியையோ, இனிப்பு உணவுகள் மீதான ஆசையையோ அதிகரிப்பதில்லை எனவும், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்துவதில்லை எனவும் ஐரோப்பாவின் மூன்று பாரிய மருத்துவப் பரிசோதனைகளின் மீளாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இனிப்புச் சுவை கொண்ட உணவுகளை உண்பது அதிகமாகச் சாப்பிடுவதைத் தூண்டி வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்ற பொதுவான அச்சத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் சவால் விடுத்துள்ளன.

ஓராண்டு கால எடைப் பராமரிப்பு ஆய்வில், சத்துக்களற்ற செயற்கை இனிப்பூட்டிகளை உட்கொண்டவர்கள், அவற்றைத் தவிர்த்தவர்களை விடச் சற்று அதிகளவான எடை குறைப்பைத் தக்கவைத்துக் கொண்டனர்.

52 வாரங்கள் நடைபெற்ற இவ்வாய்வில், வெறும் தண்ணீர் அருந்தியவர்களை விடச் செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த பானங்களை அருந்தியவர்கள் சற்று அதிக எடையைக் குறைத்துள்ளனர். எனினும், இது மருத்துவ ரீதியாகப் பாரிய மாற்றமாகக் கருதப்படவில்லை.

எடை குறைப்புத் திட்டங்கள் எதுவுமின்றி உணவில் இனிப்புச் சுவையை அதிகரிப்பதாலோ அல்லது குறைப்பதாலோ உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இனிப்புச் சுவையை உண்பது அதிக கலோரிகளை உட்கொள்ளத் தூண்டுமா என ஆராயப்பட்டதில், செயற்கை இனிப்பூட்டிகள் பசியையோ, உணவு உட்கொள்ளும் அளவையோ அதிகரிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மாறாக, ‘SWEET’ ஆய்வில் இனிப்பூட்டிகளைத் தவிர்த்தவர்களுக்கே காலப்போக்கில் இனிப்பு உணவுகள் மீதான விருப்பம் அதிகரித்திருந்தது.

இது குறித்து லீட்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரஹாம் ஃபின்லேஸன் கூறுகையில், “சீனிக்குப் பதிலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவது இனிப்பு மீதான ஆசையைத் தூண்டும் என்ற பொதுவான அச்சத்திற்கு இந்த ஆய்வுகளில் எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. இனிப்பூட்டிகள் மட்டுமே எடை குறைப்புக்கான தீர்வல்ல; ஆனால் ஆரோக்கியமான உணவு முறையின் கீழ் இனிப்புச் சுவையைத் தக்கவைத்துக்கொண்டு சீனியின் அளவைக் குறைக்க இவை பெரிதும் உதவும்“ எனத் தெரிவித்துள்ளார்.

செயற்கை இனிப்பூட்டிகளை உட்கொண்டவர்கள் மற்றும் தவிர்த்தவர்களின் இரத்த குளுக்கோஸ், இன்சுலின், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நொதிகள் ஆகியவற்றில் பாரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படவில்லை. சில குறுகிய காலப் பரிசோதனைகளில், சீனிக்குப் பதிலாக இனிப்பூட்டிகளைப் பயன்படுத்தியபோது உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அதிகரிப்பு குறைந்திருந்தது. குடல் பாக்டீரியாக்களில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும், அதனால் இதய ஆரோக்கியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) நீண்டகால எடைக் கட்டுப்பாட்டிற்குச் செயற்கை இனிப்பூட்டிகளை நம்பியிருக்க வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில், பிரித்தானியாவின் பல சுகாதார அமைப்புகள் சீனி உட்கொள்ளலைக் குறைக்க இவற்றைப் பயனுள்ளதாகக் கருதுகின்றன.

இந்த ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் அதிக உடல் எடை கொண்ட பெரியவர்கள் என்பதால், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இம்முடிவுகள் எந்தளவுக்குப் பொருந்தும் என்பது தெளிவாகவில்லை. எனவே, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவை பாதுகாப்பானவையாகத் தெரிந்தாலும், நீண்டகாலப் பயன்பாட்டின் விளைவுகள் குறித்து மேலதிக ஆய்வுகள் அவசியம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.