உடல் எடையைக் குறைக்கும் சக்தி வாய்ந்த புதிய ஊசி மருந்து!

அதிக உடல் எடையைக் குறைப்பதற்காகப் பரிசோதனை ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள ‘ரெட்டாட்ரூடைட்’ எனும் புதிய ஊசி மருந்து, உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், கடுமையான முழங்கால் மூட்டு வலியையும் பெருமளவு குறைக்க உதவும் எனப் புதிய மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
உடல் எடையைக் குறைப்பது மூட்டு வலியைக் குறைக்க உதவும் என்றாலும், நடக்கும்போதும் படிக்கட்டுகளில் ஏறும்போதும் ஏற்படும் கடுமையான வலியால் நோயாளிகளால் உடற்பயிற்சி செய்து எடையைக் குறைக்க முடிவதில்லை. இந்தச் சிக்கலுக்குப் புதிய மருந்து சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக தலைமையில் 1,000-க்கும் மேற்பட்டோரைக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டு பாரிய மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகள் ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
இம்மருந்தின் அதிகபட்ச அளவைப் பெற்றுக்கொண்டவர்கள் சராசரியாகத் தமது உடல் எடையில் சுமார் 25% வரை குறைத்துள்ளனர். சிலர் 100 பவுண்டுகளுக்கும் அதிகமான எடையைக் குறைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்தைப் பெற்றுக்கொண்டவர்களில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர், தமது முழங்கால் வலியில் குறைந்தது 50% குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (போலி மருந்து வழங்கப்பட்டவர்களில் 38% பேருக்கு மட்டுமே இத்தகைய மாற்றம் தெரிந்தது).
உடல் எடை கணிசமாகக் குறையும்போது முழங்கால்களில் ஏற்படும் அழுத்தம் குறைவதால் வலி குறைந்து, நோயாளிகளின் அன்றாடச் செயல்பாடுகள் மேம்படுவதாகப் பேராசிரியர் வைத்தியர் தாமஸ் ஷ்னிட்சர் (Dr. Thomas Schnitzer) விளக்கியுள்ளார்.
எலி லில்லி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள ரெட்டாட்ரூடைட், வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப்படும் ஊசி மருந்தாகும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள செமாக்ளுடைட் மற்றும் டிர்செபடைட் ஆகிய மருந்துகள் ஒன்று அல்லது இரண்டு ஹார்மோன் ஏற்பிகளை மட்டுமே இலக்கு வைத்து 10% முதல் 20% வரை எடையைக் குறைக்கின்றன. ஆனால், ரெட்டாட்ரூடைட் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய மூன்று இயற்கை ஹார்மோன்களைத் தூண்டுவதன் மூலம் 20% முதல் 25% வரை எடையைக் குறைக்கிறது.
மேலும், இம்மருந்தைப் பயன்படுத்தியவர்களுக்கு இரத்த அழுத்தம் குறைதல், இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைதல் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம் குறைதல் போன்ற மேலதிக ஆரோக்கிய நன்மைகளும் கிடைத்துள்ளன.
இம்மருந்து இன்னும் பரிசோதனை நிலையிலேயே உள்ளதால், பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதியைப் பெற வேண்டியுள்ளது.
உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகியவையே எடை குறைப்புக்கான முதல் தேர்வாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் வைத்தியர் ஷ்னிட்சர், இத்தகைய மருந்துகளால் இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் தசை இழப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக மூட்டு வலி உள்ளவர்களுக்கு மூட்டுகளைத் தாங்கிப் பிடிக்கத் தசை வலிமை மிகவும் அவசியம் என்பதால், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இவற்றை நாடக்கூடாது.
அத்துடன், இம்மருந்து மூட்டு தேய்மானத்தை முழுமையாகத் தடுத்து, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க உதவுமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் தேவை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.