உடற்பயிற்சி என்பது வெறுமனே உடல் வலிமையையும் இயக்கத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பார்க்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நோய் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என 129 அறிவியல் ஆய்வுகளை உள்ளடக்கிய புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

வழக்கமான உடற்பயிற்சி மூலம் உடல் இயக்கம், சமநிலை, மனநிலை மற்றும் சிந்தனைத் திறன் மேம்படுவதுடன், தடுமாறி விழுதல் மற்றும் உடல் ஊனமடைதல் ஆகியவையும் குறைகின்றன.

குறிப்பாக, உடற்பயிற்சியின் போது தசைகளில் ஏற்படும் உயிரியல் மாற்றங்கள் நோயின் தாக்கத்தைக் குறைக்க உதவுகின்றனவா என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து ஆய்வாளர் வைத்தியர் மிகுவல் ஜெர்மன் போர்டா கூறுகையில், “தசைகள் என்பவை உடலை இயக்குவதற்கு மட்டுமானவை அல்ல; கணையம் இன்சுலினைச் சுரப்பது போலவும், தைராய்டு சுரப்பி ஹார்மோன்களைச் சுரப்பது போலவும், உடற்பயிற்சியின் போது தசைகள் ‘எக்ஸர்கைன்ஸ்‘ (Exerkines) எனப்படும் ஹார்மோன் போன்ற இரசாயனத் தூதுவர்களை வெளியிடுகின்றன“ எனத் தெரிவித்துள்ளார்.

தசைகள் சுருங்கி விரியும் போது வெளியாகும் இந்த மூலக்கூறுகள் இரத்த ஓட்டத்தின் வழியாக மூளை, இதயம், கல்லீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றைச் சென்றடைந்து நன்மை பயக்கின்றன. மூளை தசைகளைக் கட்டுப்படுத்தினாலும், உடற்பயிற்சி செய்யும் தசைகள் இந்த ‘எக்ஸர்கைன்ஸ்’ மூலம் மூளைக்குப் பாதுகாப்பான சமிக்ஞைகளைத் திருப்பி அனுப்புவதாக மற்றொரு ஆய்வாளர் வைத்தியர் சலோமன் பேஸ்-கார்சியா விளக்கியுள்ளார்.

பார்க்கின்சன் நோயானது மூளையில் டோபமைன் உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் அழிவதால் ஏற்படுகிறது. இது உடல் இயக்கக் கோளாறுகளை ஏற்படுத்துவதுடன், சிந்தனைத் திறன், ஞாபக சக்தி, மனநிலை மற்றும் தூக்கத்தையும் பாதிக்கிறது.

உடற்பயிற்சியின் போது வெளியாகும் இரசாயன மூலக்கூறுகள் மூளையில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, மூளை தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும் ‘நியூரோபிளாஸ்டிசிட்டி’ திறனை ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் நரம்பு செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

வயது முதிர்வால் தசை வலிமை குறைவது (Sarcopenia) பார்க்கின்சன் நோயாளிகளுக்கு அறிவாற்றல் குறைபாடு மற்றும் ஞாபக மறதி போன்ற பாதிப்புகளை மேலும் அதிகரிக்கக்கூடும்.

எனவே, கீழ்க்கண்ட பயிற்சிகளை இணைத்துச் செய்வது மிகுந்த பலனளிக்கும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது:

  • ஏரோபிக் பயிற்சிகள் (Aerobic exercise): நடைப்பயிற்சி மற்றும் மெல்லோட்டம் (இதய ஆரோக்கியத்திற்கு).
  • எதிர்ப்புப் பயிற்சிகள் (Resistance training): பளு தூக்குதல் மற்றும் உட்கார்ந்து எழுதல் (தசை வலிமைக்கு).
  • சமநிலை பயிற்சிகள் (Balance exercises): தாய் சி (Tai Chi) மற்றும் ஒற்றைக் காலில் நிற்றல் (உடல் நிலைத்தன்மைக்கு).

பார்க்கின்சன் நோயின் ஆரம்ப கட்டத்திலிருந்தே நோயாளிகளின் உடல் திறனுக்கு ஏற்ப தொடர்ச்சியான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, உடல் இயக்கத்தையும் மூளையின் செயல்பாட்டையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும் என மருத்துவ வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகின்றன.